Saturday, May 9, 2015

அன்னையர் தினம்

ஒவ்வொரு நாளின் சூரிய
உதயமாய் வீட்டில்
முதலில் விழித்திடும்
அந்த விழிகளுக்கு சொந்தமானவள்...
விழித்த நொடி முதலே பணி
விடை செய்ய தொடங்கிடும்
வளைகரங்கள்...
சில அடிகளில் உள்ள
வீட்டிற்குள் பல மைல்கள்
தூரம் நடந்திருக்கும்
அவளின் ஓயாத கால்கள்...
தேனியும் சற்று வியந்துதான்
பார்க்கும் அவளின்
சுறுசுறுப்பை கண்டு.!
வெளிஉலகம் அறிந்திடாத
அவள் மனம் வீட்டின்
அத்தனை மனங்களையும்
அறிந்திருக்கும்!
தன்னலம் விரும்பாமல்
பாராட்டுக்காக காத்திடாமல்
தொண்டூழியம் செய்திடும்
அன்னை தெரசா அவள்!!
சூரியன் கூட தன் மாற்றாக
மாலையில் நிலவை
நிறுத்திச் செல்லும்
 அவளுக்கு மாற்றில்லை
வாழ்நாள் முழுதும்!!
உணவை சமைத்து முழுதும்
பரிமாறுவதில் பசியாறிக்
கொள்ளும் அவள் குணம்!!
அன்பை பொழிவதிலும்
அரவணைத்து ஆறுதல்
சொல்வதிலும் சந்தோஷம்
கொள்ளும் அவள் ஆசைகள்!!
அதிகாலை தேநீரிலிருந்து
அந்தி இரவு வரை யாருக்கு
என்ன பிடிக்குமென்ற
பட்டியலை தேர்வுசெய்வதிடும்
அவளின்
கணிப்பொறி மூளை!!
எல்லார் மனத்திலும் நீக்கமற நிறைந்து
திரும்ப செலுத்த முடியாத
கடனை தந்துகொண்டே  எல்லோர்
வாழ்வின் ஆதியும் அந்தமாகவும் வாழ்ந்து முடிக்கும்
உன்னதமான ஜீவன்

😊கடவுளுக்கும் மேலான அம்மா😊

Sunday, May 3, 2015

காத்திருப்புகள்...



உனைப் பற்றிய
யாதொரு
எண்ணமும் இல்லாமல்,
நினைவும் கொள்ளாமல்
இதுநாள்வரை இருந்திட்டேன்
என்பதே சற்று ஆச்சர்யம்தான்...

சில நாட்களாய் மட்டும்
அதிகப்படியான அளவிலும்,
இந்த வருட
பிறந்த நாளன்றைய
வாழ்த்துகளின்
தொடர்ச்சியாக
எப்போது திருமணம்
என்ற வினவலின்
நுனியில் தொக்கி
நிற்கும் வினாக்குறியாக
முகம் தெரியாத
உந்தன் மீதான
எண்ணங்களும்
எதிர்பார்ப்புகளும்
கூடியாடி கும்மாளமிடத் துவங்கிவிட்டது...


அந்த எதிர்பார்ப்பின்
எழுத்துகளாய்,
எண்ணத்தின்
தொடக்கமாய்
இந்த காத்திருப்புகள்
தொடர வேண்டும்
என்றெண்ணித்
தொடங்கிட்டேன்...

விடியாத காரிருளில் உன்
காதில் ஊஞ்சலாடும்
சிமிக்கியின்
சிணுங்கலுக்காக
காத்திருக்கும் எந்தன்
கலையாத துயில்...

காலைப் பொழுதின்
ரம்மியம் கூட்டும்
தேநீருடன்
உன் இதழ்கள் பட
காத்திருக்கும்
தேநீர்க்கோப்பை...

நீராடி முடித்த
என்கேசத்தின்
நுனியில் உன்மீது
பட்டுத் தெறித்து
விளையாடிட
காத்திருக்கும்
நீர்த் துளிகள்...

உன் ரசனையில்
நான் உடுத்திக்
கொள்ள உன்
கவனத்தை ஈர்த்திட
வரிசையில் நின்று
காத்திருக்கும் ஆடைகள்...

உன் கார்கூந்தலில்
மகுடம் சூட்ட
காத்திருக்கும்
நம்வீட்டு தோட்டத்து
மலர்ச்செடிகள்...

உன் மலர்க்கரங்களை
சிவக்கச் செய்ய
காத்திருக்கும்
நான்வைத்த
மருதாணிக்கொடி...

அந்தி வேளையில்
என் தோள்
சாய்த்து நடந்திடும்
பாதங்களை தொட்டு
நனைத்து ஓடியாட
காத்திருக்கும்
கடல் அலைகள்...

கார்மேகம் புடை சூழ
நாமிருவரும் கைகோர்த்து
நனைந்து ரசித்திட
காத்திருக்கும்
மழை சாரல்கள்...

முன்னிரவு நிலவொளியில்
நம் நான்கு கால்களின்
தடம் பதித்திட
காத்திருக்கும்
பூக்கள் சிதறிய சாலை...

உன் மலர்க்கரம்
கொண்டு திறந்திடக்
காத்திருக்கும்
என் கனவுலகம்...

உன் கால்கொலுசின்
தாலாட்டில் மெய்மறந்து
உறங்கிட
காத்திருக்கும்
என் விழிகள்...


என்னைப் போலவே
காத்திருக்கும்
உன் எதிர்பாபர்ப்புகளை
அறிந்து நிறைந்திடச்
செய்ய காத்திருக்கும் நான்...

எங்கோ பிறந்திருந்தாலும்
எனக்காகவே
துடிக்கப்போகும்
இதயமொன்றின்
வருகையை
எதிர்பார்த்துக்
காத்துக்கிடக்கிறேன்
இந்த காத்திருப்புகளுடன்...

Monday, April 6, 2015

தமிழ் வாழ்க

தமிழ் வாழ்க 

#தமிழ்வாழ்க இந்த பதிவு உலக அளவில் ட்விட்டரில் பேசப்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பொழுதில் கொஞ்சம் அதிசயித்துதான் போனேன்! தமிழ்ப்பற்று இன்றும் அனைத்து தமிழர்களின் மனத்திலும் அளப்பரியதாய் இருப்பதாய் நினைத்து! 
இது உண்மையில் பற்றுதானா இல்லை மக்களின் மேல்மட்ட ரசனையை காட்ட போடும் தம்பட்டமா எனும் ஐயமுற்றேன்! 
காரணம் கடந்த சனவரி மாதம் ஊருக்கு சென்ற பொழுது நடந்த கசப்பான ஒரு சம்பவம்.. 
விமான நிலையத்தில் குடியுரிமை சோதனையை முடித்து விமானத்தில் உள்ளே செல்வதற்கான காத்திருப்பு அறையில் அமர்ந்திருந்தோம் பயணிகள் அனைவரும்.
அனைவரிடமும் கைப்பை மட்டுமே மீதமிருந்தது.
விமான பணிப்பெண்கள் இருவர் ஒவ்வொரு பயணிடமும் சென்று ஏதோ சொல்லிக் கொண்டே வந்தார். எனக்கருகில்  நாற்பது வயதுமிக்க ஒரு நபர் அமர்ந்திருந்தார்.
ஏதோ ஒரு கலவரம் படர்ந்திருந்தது அவர் முகத்தினுள். 
அந்த பெண்மணி இவர் அருகில் வந்து ஏதோ கூற இவர் கடகடவென தனது பையைத் திறந்து "ஃபோன் ஒன்லி!!" "ஐ செக் ரெடி" என தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் சமாளித்துக் கொண்டிருந்தார்! 
இந்த பாழாய்ப் போன காது கேட்பொறியை அணிந்திருந்ததால் இதை கவனிக்கவில்லை. 
அந்த நபர் இன்னும் பதட்டத்தோடு எழுந்து நிற்க சற்றே கவனித்து அந்த விமான ஊழியரிடம் என்னவென்று விசாரித்தேன்.அந்த பெண் மிடுக்கான ஐரோப்பிய ஆங்கிலத்தில் அவருடைய கைப்பையின் வடிவம் சற்று பெரிதாக இருப்பதாகவும் அதை விமானத்தில் பயணிகள் இருக்கையின் மேற்புறத்தில் வைக்க முடியாது எனவும் ஆகையால் அந்த கைப்பையில் விலை உயர்ந்த பொருட்கள் இருந்தால் அதை ஒரு சிறிய பையில் எடுத்துக் கொண்டு இந்த பெட்டியை தருமாறு கேட்டிருக்கிறாள். 
மற்ற பயணிகளிடம் இதைச் சொல்வதற்காக சென்றுவிட்டாள்!
இங்கு ஒன்றை கவனிக்க அந்த பணிப்பெண் ஒரு தமிழ்ப் பெண், 
ஆனால் அந்த நபரிடம் ஆங்கிலத்திலேயே பேசியிருக்கிறாள். நான் அந்த நபரிடம் விளக்கிக் கூறி அவருடைய பையை பணிப்பெண்ணிடம் கொடுப்பதற்காக தயாராக வைத்திருக்க சென்று திரும்பிய அந்த பெண்மணி முடிந்ததா என்று தலையசைத்தாள்! 
"நீங்க தமிழ்தானே?" என்றதற்கு
"ஆம்!அதனாலென்ன?,  
ஏன் நீங்கள் தமிழென்றால் நான் உங்களுடன் தமிழில்தான் கொஞ்சி கதைக்க வேண்டுமோ? 
இதுதான் எனது அலுவல்மொழி இதைத்தான் நான் பயன்படுத்துவேன்" என்று கூறி "இதெல்லாம் விமானத்தில போகனுமா என்ன? "எனக் கூறினாள்
நான் சற்றே கடுமையாக "இவர்கள் போகவில்லையென்றால் உங்களுக்கு இங்கே வேலையும் இல்லையே" என்றேன் சற்று காட்டமாக! 
ஆங்காரமாக என்னை ஏதோ திட்ட வந்தவளை மேலும் சிலர் கேள்விகள் கேட்க ஏதோ என்னை சபித்துக் கொண்டும் கண்களால் தீயிட்டு கொளுத்தியும் போய் விட்டாள். 
அந்த நபரை சென்னை விமான நிலைத்தின் வெளிக் கதவு வரை கொண்டு விட்ட பொழுதில் அவர் கண்ணில் ஆயிரம் நன்றிகள்! 
அவர் மகனை காட்டி சொன்னார் அந்த பெண்ணிற்கான பதிலை வரும்காலத்தில் தன் மகன் கூறுவான் என்று பெருமிதமாக.
சிறிது நேரம் உரையாடிவிட்டு வீட்டுக்கு செல்லும் ஆரவாரத்தில் இந்த நிகழ்வை மறந்தே விட்டேன்! 
இங்கு தமிழ் வாழ்க என கூக்குரலிடும் சிலரை பார்த்ததும் இதை பதிந்திட தோன்றியது.
இங்கே விலையுயர்ந்த ஸ்மார்ட் ஃபோன்களில் தமிழை தட்டும் நம்மில் எத்தனை பேர் தம் நாக்கில் தேவையான இடத்தில் மட்டும் தமிழை பயன்படுத்துகிறோம்! 
நம்மை பொறுத்தவரையில் ஆங்கிலம் பேசுவது நாகரீகத்தின் உச்சம்! 
இந்த உச்சத்தை தன்னை விட அறிவிற்சிறந்த ஒருவரிடம் காட்டுகிறோமோ இல்லையோ தன்னை விட எளியவரிடம் மிக பந்தாகவாக காட்டி அவரின் தன்மானத்தை நிர்வாணப்படுத்திவிடுகிறோம்!
ஃபோனில் தமிழ் வருவதை பெருமையாகவும் தன் மகன், மகள் நாவில் வருவதை அபத்தமாகவும் எண்ணியே தமிழை போற்றுகிறோம்! 
இதற்காக உங்களை தூய தமிழில் பேசி சங்கம் வளர்க்க சொல்லவில்லை, முடிந்தவரையில் தமிழை மட்டுமே நம்பி வாழும் மக்களிடம் ஆங்கில மிடுக்கை காட்டி பயமுறுத்த வேண்டாமென்கிறேன்! 
தமிழ் தெரியும் என்பதை தைரியமாக சொல்ல தத்தம் சந்ததிக்கு கற்று கொடுங்கள்!
தமிழை வாழ வைக்கவோ வளர்க்கவோ வேண்டியதில்லை,  தேவைக்கும் அதிகமாகவே வளர்ந்தும் வாழ்ந்தும் தன்னிகரில்லா புகழைப் பெற்ற ஒரு அற்புதத்தை சுவாசித்திருக்கிறோம் என்ற பெருமை கொள்ளுங்கள் அது போதும்!
"தமிழ் அவமானம் அல்ல அடையாளம்!"

Monday, December 29, 2014

அறிவுரை இலவசம் !!!

இந்தியாவின் தேசிய வியாதி மறதி என்பது பழங்கதையாகி இப்போது சேர்ந்துள்ள மற்றொன்று ஊருக்கு உபதேசம்! 
நாங்கள் என்றுமே ஓட்டுப் போட்ட அரசியல்வாதிகளை எந்த கேள்வியையும் கேட்பதில்லை ஆனால் திரையில் தோன்றும் நடிகனிடம் மட்டும் எந்நாட்டுக்கு என்ன செய்தாய் என்று வரிந்துகட்டி வரிசையில் நிற்போம்! மக்களுக்காக நியமிக்கப்பட்ட அரசாங்க அதிகாரிகளுடம் பம்மி பம்மி பேசுவோம், மாணவனை திருத்துவதற்காக பிரம்பெடுத்த ஆசிரியரை எதிர்த்து போர்க் கொடி பிடிப்போம்!
எந்த ஊழலும் எங்களுக்கு சகஜம்தான் ஆனால் சந்தையில் காய்கறி விற்கும் விவசாயிடம் மட்டும் உற்பத்தி விலையை விட பத்துப் பைசா அதிகம் கொடுத்து வாங்க பேரம் பேசுவோம்! 
இதற்கேற்ற ஊடகமும் தினமொரு தனியொருவரின் அந்தரங்கத்தை துகிலுரிக்கும் மக்களின் இன்றைய நாளைய தேவைகளை உணர்த்த மறந்து!
தாய்மொழி பேசத் தெரியாது என்பதை மெத்தன பெருமையுடனும் மது பழக்கம் இல்லையென்பதை பெருங்குற்றமாகவும் ஆர்ப்பரிப்போம்! 
இன்றைய நாளைக் கடத்துவதிலும் எதிர்காலத் திட்டங்களுமாய் ஆயிரம் வகுத்து ஓடிக் கொண்டே அம்பானியின் ஆடம்பரத்தை விமர்சிப்போம்!  
அடுத்தவரின் ஆடம்பரத்தை குறை கூறும் நாங்கள் தர்மம் தலை காக்கும் என்பதற்காக பிச்சையிடுவோமே தவிர தன் தேவை போக மீதியை நாதியற்றவர்களுக்கு வழங்கத் துணிவதில்லை!
அமைஞ்சிக்கரையில் அமர்ந்து கொண்டே அமெரிக்க அரசியலை விமர்சிப்போம், சொந்த நாட்டில் ஓட்டுக்கு ரேட்டுப் பேசுவோம்!
இதையெல்லாம் தாண்டி நவநாகரீகம் என்ற பெயரிலே நல்லதையெல்லாம் மறைத்து மறைத்து நாளடைவில் மறந்தே போவோம்!
சாப்பிட்டிங்களான்னு நேர்ல ஒரு வார்த்தை கேட்காமலே தாயதிகாரம் எழுதி இணையத்தில் நற்பெயரெடுப்போம்!  
எப்படியாவது எதையாவது பிதற்றி சில பெண் பெயருடைய போலி ஐடியிடமிருந்து ஸ்மைலி வாங்குவதற்காக மண்டையை குடைந்து தத்துவ சிந்தனைகளை கடைந்தெடுப்போம்! இதெல்லாம் வெட்டி , வீண்வேலை என உணரும்போது எதையோ இழந்துவிட்ட ஒரு வெற்றிடம் தோன்றும்! 
இது இப்போதைய மரபணுக்களில் செயற்கையாக புகுத்தப்பட்டுவிட்ட இயற்கையாகிவிட்டது!
நான் இதையெல்லாம எழுதிவிட்டதால் அதிலிருந்து விதிவிலக்கானவனல்ல, நானும் இப்போது அதே வினையின் அறிகுறியைத்தான் இங்கே காட்டிக் கொண்டிருக்கிறேன்! அதாங்க "அட்வைஸ் அட்ராசிட்டிஸ்"

வேறென்ன செய்வேன் நான்!!!

அன்னைத் தெரசா போன்று வாழ்நாளெல்லாம் 
தொண்டூழியம் செய்திடுவேன் 
என்று உறுதி பூண்டு வாழ்ந்து 
முடித்திட முடியாது என்னால்!
அதற்கு எனது பணிசுமை, 
குடும்ப சுமை, கடமைகள், கட்டுப்பாடுகள், கண்ணியங்கள் 
என காரணங்களால் 
அரணமைத்து ஒளிந்து 
கொள்ள விருப்பமில்லை 
எனக்கு!  
உண்மை யாதெனில்  
என்னைச் சார்ந்த 
அனைத்தையும் விட்டொழிந்து என்னைச் சாராத 
உயிர்களுக்காக என்னை 
முழுமையாக அர்ப்பணிக்க இயலாமையும், 
என்னுடைய சிறுசிறு சந்தோஷங்களையும் 
தியாகம் செய்யும் மனப்பாங்கையும் நான் கொண்டிருக்கவில்லை
என்பதே நிதர்சனம்! 
இதற்காக தன்னலம் மட்டுமே 
போற்றும் அற்ப பதறும் நானில்லை!
வழக்கமாக நான் செல்லும் 
ஓர் உணவுவிடுதியின் 
எடுபிடி வேலை செய்யும் 
சிறுவனையும், 
சாலையோரத்தில் பூ 
விற்றுக் கொண்டிருக்கும் பெண்மணியையும், 
தானியங்கி இயந்திரத்தின் 
கதவுகளை பாதுகாக்கும் முதியவரையும் பார்த்த 
மாத்திரத்தில் சற்று மனம் கணத்துத்தான் போகும்! 
இந்த வகையில் இன்னும் 
நிறைய மனிதர்களை 
அவர்களின் அன்றாட 
பிழைப்பிற்காக 
அல்லல்படும் நிலையினைக் 
கண்டு வருந்தியதுண்டு!  
வருந்திய மனதை கொண்டு 
கடவுளை சபிக்கவா முடியும், 
கடவுள் மட்டும் கண்ணுக்குத் தெரிந்திருந்தால் துதிகளை 
விட சாபங்களாலேயே அதிகம் 
ஆராதனை செய்ய பட்டிருப்பார்! அதனாலேயே கண்ணுக்குத் 
தெரியாத அருவுருவமாய்த்
திரிகிறார் போலும் 
இந்த கடவுள்!
வேறென்ன செய்ய முடியும் என்னால் ?
இந்த பரிதவிப்பை, வருத்தத்தை அவர்களின் நலனில் அக்கறை கொண்டு நலன் விசாரிப்பதாய் நினைத்து வெந்தணலில் வேகும் அவர்களின மனத்தினுடைய 
ரணத்தை அதிகரிக்க 
விரும்பவில்லை என் மனம்! 
இங்கே சிறுவனின் பள்ளிக் கல்விக்காகவும் 
பூ விற்கும் அம்மாவின் சுதந்திரத்திற்காகவும்
முதியவரின் ஓய்வுக்காகவும் 
போராட துணிவுமில்லை அது முறையுமில்லை!
உனக்கேன் அக்கறை 
என்று கேட்க ஆயிரம் 
பகுத்தறிவாளிகள் உண்டு 
இங்கே! 
மாற்றாய் அவர்களின் மனம் எதிர்பார்க்கும் மனிதம் என்ற 
ஒன்றை அளவில்லாமல் 
என்னால் பரிமாற முடியும்! 
பார்த்த மாத்திரத்தில் உதிரும் 
சிறு புன்னகையிலாவது ஒரு மதிப்பையும் ஆறுதலையும் 
தர முடியும் என்னால்!  
வாழ்க்கையின் யுத்த களத்தில் வலிகளோடு ஆயுதமேந்தி 
போராடும் அவர்களின் உயர்ந்த குணத்தையும் தீரமான 
நெஞ்சத்தையும் சற்று வியந்தே 
கூற முடியும்!
இது அவர்களின் புகழ்பாடுவதாக எண்ண வேண்டாம்,
இன்னல்களின் மேல் கூடு  
கட்டி வாழும் வாழ்க்கையின் மேல் இன்னும் சிறிதளவேனும் 
ஒரு பிடிப்பை ஏற்படுத்தும் ஒரு காரணியாக இருந்துவிட்டு 
போகலாம் என்பதே!
அருகில் தினம் காணும் 
இத்துனை பேரின்
துன்பங்களையும் 
பிரச்சினைகளையும் 
என்னால் தீர்க்க இயலாது 
போனாலும் தன்னிலையை 
எண்ணி தொய்வடையாமல் முன்னேறிச் செல்ல 
ஒரு உந்ததுதலின் அழுத்தத்தை 
தர இயலும்!  
இதைத் தவிர உலகின் 
எங்கோ ஓர் மூலையில் 
பசியால் வாடி, 
போரில் சிக்கி உயிரிழக்கும் அனைவருக்காகவும் நான் துயரபடுகிறேன் 
வேதனைபடுகிறேன் 
என்றெல்லாம் அழுதிட தோன்றுவதில்லை!
அந்த நொடிப் பொழுது தோன்றும் "அய்யோ பாவம்" என்ற ஒற்றை சொல்லுடன் முடிந்திடும் அதற்கான அனுதாபங்கள்! 
அனைத்தையும் சரி செய்ய இயலாவிட்டாலும்  
நொடிப் பொழுதில் 
பதைபதைக்கும் 
மனிதத் தன்மையயாவது 
வாழ்நாளெல்லாம் 
கொண்டிருக்க என்னை நானே வேண்டிக் கொள்கிறேன்!
ஏதோ என்னால் முடிந்தவை
இந்த பிறவியில்,
வேறென்ன செய்வேன் நான்!

மனதிற்கினிய மார்கழி

விட்ட குறை தொட்ட குறையாக வருணபகவானின் இறுதி சுற்று கொடையாக பெய்திடும் மழையும் அதன் குளிர்தன்மையை சற்று அதிகரிப்பதற்காகவே பனியும் சேர்ந்து கொள்ளும் இந்த மார்கழியில்! 
இந்த நாட்களின் குளிர்த்தூக்கம் பொதுவாக கிட்டதட்ட எல்லோராலும் ரசிக்கப்படும் ஒன்று! 
கதிரவன் கூட சிறு குழந்தை போல சிணுங்கலுடனே எட்டிப்பார்க்க தயங்கும் காலை பெரும்பாலும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலின் பஜனை துதிகளுடன் தொடங்கி பின் ஐயப்ப பக்தர்களின் சரணகோஷத்துடன் கோவில் ரேடியோ செட்டுகளில் வீரமணி,ஶ்ரீஹரி,புஷ்பவனம் குப்புசாமி பாடல்கள் தெருவெங்கும் ஓங்கி ஒலிக்கும்!
மனமில்லாமல் போர்வையின் இறுக்கத்தில் இருந்து விடுபட்டு அதிசூடான தேநீர் இதமாக கையிலிருக்கும்!
இந்த தேநீர் வாசலில் போடும் கோலத்திற்கு வண்ண பொடி தூவுவதற்காக அம்மா தரும் அன்பளிப்பான லஞ்சம்தான்! வாசலையடைந்தால் தெருவில் இருக்கும் அத்துனை வாசல்களிலும் கோலமிட்டு வண்ணம் தீட்ட குழுமமாய் இயங்கிக் கொண்டிருக்கும்!
அது என்னவோ இந்த கோலம் போடுவதில் மட்டும் அவ்வளவு அக்கறை இந்த பெண்களுக்கு !
பெரும்பாலும் நட்பு வட்டத்தில் எல்லா ஆண்களுக்குமே இந்த வண்ணப் பொடி தூவிய அனுபவமிருப்பதாகவே எண்ணம்!
வாசலையும் தாண்டி தெருவீதியின் பாதிவரை படர்ந்த ரங்கோலிக்கு வண்ணம் தீட்டி முடியும் தருவாயில் வீட்டின் பின்புறம் ஓட்டமாய் ஓடி 
பத்தடி தூரத்திற்கு மேல் எதும் தட்டுப்படாத அந்த வெளீர்திரையில் புகுந்து வயல்வரப்பினுள் கால் வைக்கும்
தருணம் அப்பப்பா அந்த நொடிப் பொழுது உணர்வுகளை லயித்து எழுத இன்னும் ஓர் கட்டுரை வேண்டும்! 
சுருக்கமாக குளிர்ந்த முத்துகளால் விரிக்கப்பட்ட வெள்ளிக் கம்பளங்களாய் பாதங்களில் இதமாக வருடியது போன்றதொரு உணர்வு! 
நடைபயிலாத குழந்தையின் பாதங்களை சில மணித்துளிகள் உணர்ந்து சில பர்லாங்கு தூரம் கடந்தால் கோலத்தின் பினிசிங் டச்சுக்கு பரங்கி பூக்களை பறித்து கொண்டு திரும்ப அதே வரப்பின் லயிப்பில் வீடு திரும்ப கோலத்திற்கு பரங்கி பூ மகுடம் சூட்டப்படும்! 
இலை சருகளால் உருவாக்கப்பட்ட நெருப்பிலே சுற்றியமர்ந்து குளிர்காய்ந்து கொண்டிருக்கும் சிறு சிறு கூட்டங்களாக இருக்கும் சிறுசும் பெருசுமாக எம்மக்கள்!
அதற்குள் பசும்பால் கறந்து அடுத்த லஞ்சம் ரெடியாக இருக்கும் இம்முறை பால்டெப்போவிற்கு செல்வதற்காக!
மார்கழியின் அழகு அதிகம் புலப்படுத்துவது இயற்கையின் பசுமையைத்தான்! 
இதை பரந்த வயல்வெளியில் காணும் பொழுது வானதேசமும் ஏன் கைலாயமும் வைகுண்டமும் கூட இந்தளவு பவிசைக் கொண்டிருக்குமா என்று கேட்டால் இல்லையென்றே தோன்றும்! 
இரண்டாம் போக விளைச்சலுக்காக நட்ட பயிர்கள் பால்கட்டிய வண்ணம் செங்கதிர்களால் தலை கவிழ்ந்து நிற்கும் பொழுது முறைப்பையனை கண்ட பெண்ணின் நாணத்தை காட்டிக் கொண்டிருக்கும்! 
இன்னும் சொல்லபொனால் பருவ மங்கையொருத்தி பட்டுத் தாவணி உடுத்தி சடையில் பூ தைத்த வண்ணம் கண்ட நிலையில் அந்த செழுமையில் பயிர்களின் தலையில் வெண்ணிற முத்துகள் மகுடம் சூட்டியிருக்கும்!
மங்கையிடம் காதல் கொண்டு சுற்றும்வாலிபனாக சில சிட்டுக்குருவிகள் நெற்கதிர்களை தன் குஞ்சுகளுக்காக சேகரிக்க எத்தனித்திருக்கும்! 
சிறிய அருகம்புல்லும் நிறைமாத கர்ப்பிணியாய் தன்னைத் தாண்டிய பாரத்தை தலையில் சுமந்திருக்கும்!
இத்தனை நேரம் அமைதி காத்த கதிரவனும் இந்த பசுமையின் ரம்மியத்தில் மூழ்கி சட்டென நினைவு திரும்பி தன் கதிர்களின் ஊடே இந்த வெள்ளி முத்துகளை அள்ளிச் செல்ல கலைந்தது இயற்கையின் அழகியலும் என் நினைவுகளும்தான்!
மார்கழியில் காலைபொழுது மட்டும் என் மனதில் அவ்வளவு அழுத்தமாய் பதிந்து போன பசும் இல்லை பனி நினைவுகள்! 
மார்கழியில் ரசித்த ஓர் நாளின் காலைப் பொழுதின் ரம்மியம் மட்டுமே இது! மீண்டும் இதைப் போன்ற காலைப் பொழுதை கனவில் மட்டுமே காண்கிறேன்! 
மீண்டு(ம்) வருமா பால்யம் ?

Tuesday, December 9, 2014

கிஸ் ஆஃப் லவ்

"கிஸ் ஆஃப் லவ் "
இந்த வார்த்தை கொஞ்சம் பரபரப்பாக நண்பர்களிடமும் வேலையிடத்திலும் பரவலாகவும் பரபரப்பாகவும் பேசப்பட்ட பொழுது ஏனோ மனம் அதிகமாய் அலட்டிக் கொள்ளவில்லை !
அடுத்த நாள் மொபைலின் முக்கிய செய்தியின் நோட்டிபிக்கேசனாக வந்த பொழுது கொஞ்சம் கவனித்துதான் பார்ப்போமென்று தோன்றித் தொலைத்ததால் அதனை பார்த்து படித்ததன் வினையாக வந்த 
லாங்கர்தான் இது! 
ஒன்றும் பெரிதான விஷயம் இல்லை கேரள மாநிலத்தில் ஒரு உணவுவிடுதியில் முத்த பரிமாற்றம் செய்த ஒரு இளம் ஜோடியை அம்மாநிலத்தில் தொடங்கபட்ட கலாச்சார கண்காணிப்பு குழு அடித்து உதைத்ததால் வந்த பயங்கரம்தான் இது! 
அந்நிகழ்வை கண்டித்தும் அந்த முத்த கலாச்சாரத்துக்கு ஆதரவு தெரிவித்தும் ஒரு குழு அனைத்து இளைஞர்களுக்கும் இணையத்தின் மூலம் அழைப்பு விடுத்து முத்த போராட்டம் ஒன்றை 
வெற்றிகரமாக நடத்தியது! 
அதை காவல்துறை தடுத்து பலரை கைது செய்ததும் பின்பு விடுதலை செய்ததும் வேற கதை! 
இதெல்லாம் எங்களுக்கே தெரியும் இதில் உனக்கு என்னவோய் வந்துச்சு னு உங்க மைண்ட் கண்டபடி திட்டுறது எனக்கும் கேட்குதம்மா..... 
அதனால நாம நம்ம விசயத்துக்கு வருவோம்.. 
இந்த அருமையான அறவழிப் போராட்டம் நடந்ததை பார்த்துவிட்டு ரத்தம் கொதிச்சு எழுந்தான் பாரு நம்ம தமிழன் அடுத்த 13வது நாள் ஆதரவு தருவதற்காக தன்னுடன் படிக்கும் மாணவ மணிகளை 'ஒருங்கிணைத்து' அந்த புரட்சி போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்தான்!
தமிழன் கிட்ட இருக்க ஒரு நல்ல பழக்கம் இது உலகத்துல எவன் எங்க என்ன பண்ணலாலும் கண்ணை மூடிகிட்டு ஆதரவு தந்திடுவோம் ! 
அதுக்கும் ஒரு படி மேல போய் அதே மாதிரி ஒரு புரட்சியை இங்கு நடத்தியும் காட்டிருவோம்! 
இந்த போராட்டத்து மேல அவ்வளவு கோவம் இல்லைன்னாலும் அதை நடத்திய இடம் தான் கொஞ்சம் கலங்க வைச்சிட்டுது! 
இன்று வரையில் நான் பார்த்து வியந்த ஐஐடி கல்லூரி வளாகத்தில் தான் இந்த புரட்சி வெடித்தது வேதனைக்குரியதுதானே! 
ஏனெனில் இன்னும் சில நடுத்தர, கிராமத்து மாணவர்களின் கனவு கோட்டையாக இருந்த ஒரு மாபெரும் கல்வி நிறுவனத்தை சங்கடத்தோட பார்க்க வைத்த பெருமைக்கு இந்த ஆதரவு போராட்ட கண்மணிகளே தகுதியுடையவர்கள்! 
இந்த போராட்டத்துக்கு கண்டிப்பாக நான் எதிர்ப்புதான் தெரிவிப்பேன்! 
நீ ஆணாதிக்கவாதி பழமைவியாதி பிடித்தவன்னு கூக்குரலிடும் நண்பர்களே
இந்த மாதிரி போராட்டம் இந்த உலகத்தில் நடந்த எத்தனையோ அநியாயங்களுக்காக கண்டனம் தெரிவித்து இருந்தால் கூட இதை நான் ஆட்சேபித்து இருக்க மாட்டேன்! 
ஆனால் மேலை நாட்டில் என்றோ யாரோ அறிமுகப்படுத்திய ஒன்றை பார்த்து அதே மாதிரி நானும் செய்வேன் என்றால் என்ன சொல்வது உங்கள் 
'ஹை ஜீனிக்' மூளையை! 
மேலை நாட்டவரால் நடத்தப்படும் இந்த நிகழ்வுகள் தெரியும் உங்கள் 
'கான்டக்ட் லென்ஸ்' கண்களுக்கு அவர்கள் செய்யும் புரட்சி போராட்டங்களும் தெரந்திருந்தால் இந்தியா அமெரிக்காவை ஆண்டு கொண்டிருந்திருக்கும்! 
புலியை பார்த்து பூனை சூடு போட்ட கொண்டது அது தன்னை மேல்நிலைக்கு ஒப்பிட்டு உயர்த்த எண்ணியதாலே இங்கு பூனையை பார்த்து புலி தன் கோட்டை அழிக்க முயன்ற கதையாய் நம் நல்ல பண்புகளையும் பழக்க வழக்கங்களையும் தீயிலிட்டு அழித்துக் கொண்டே போனால் உங்களின் அடையாளம் அழிந்து "நீங்கள் எந்த கலாச்சாரம்?"என்ற கேள்வியின் சுருக்கு கயிற்றால் குரல்வளை தெளிக்கப்படும் காலம் உங்களை கதவு திறந்து அழைத்து செல்ல அவர்மேல் விழி வைத்து காத்து கொண்டுள்ளது! 
இந்த போராட்டம் நமக்கான உணவைத் தந்த ஒரு விவசாயிக்காக 
ஓர் வேளை சோற்றுக்கு 
தவிக்கும் ஏழைகளுக்காக,
இல்லை அதிகம் கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்வி நிறுவனங்களுக்காகவோ, குறைந்த பட்சம் உங்களை கல்லூரியில் சேர்க்கும் போது அலைந்து திரிந்து ஒரு அட்டெஸ்டடு சர்டிபிகேட்டிக்கு கூட லஞ்சம் கொடுத்து அதிகாரிகளுக்கு
கும்பிடு போட்டு கல்லூரியில் சேர்த்த பாவப்பட்ட தந்தைகளுக்காக நடத்தி இருந்தால் கூட புண்ணியமாக இருந்திருக்கும் ! 
இப்படி உங்களின் ஒற்றுமையை உலகமே கேலி செய்யுமளவுக்கு கிழ்நிலைப் படுத்திதான் விட்டீர்கள்! 
இதில் என்ன கலாச்சாரம் கெட்டுவிட்டதென்று நெஞ்சை நிமித்திகிட்டு முன்னால் வரும் பலம் பொருந்திய கனவாண்களே உங்கள் குடும்பத்தினர் முன் இது போன்ற நிகழ்ச்சி நிரலை விமரிசையாக நடத்தி காட்ட முடியுமா?
அல்லது உங்கள் உறவுகளை இது போன்ற போராட்டத்தில் கலந்துகொள்ள செய்ய முடியுமா? 
உறவுகள் முறையில் தாய் தந்தை சகோதர சகோதரி என அத்தனையும் இதில் அடங்கும்! 
என்னது 'என் தாயை பற்றி விமர்சிக்க உங்களுக்கு என்ன உரிமை?'என்றெல்லாம் கேட்க கூடாது ! 
இதில்தான் உங்களின் விதிமுறைப்படி கலாச்சாரம் எதுவும் கெட்டு விடுவதில்லையே?!!
அப்புறமென்ன தாயென்ன? தந்தையென்ன?  
தனியாக போராடுவதை விட குடும்பத்துடன் போராடலாமே? 
உங்கள் உறவுகளும் அந்த சுகானுபவத்தை உணர்ந்து மோட்சம் அடைந்து போகட்டுமே?
உங்களை யார் என்ன செய்து விட முடியும்?
நூலிழை இடைவெளி கூட இல்லாமல் உங்கள் தந்தை முன் இன்னொரு ஆடவனின் உதட்டில் அன்பை பரிமாறிக் கொள்ள வேண்டியதுதானே? 
உங்கள் தாய் முன் இன்னொரு பெண்ணை கட்டியணைக்க வேண்டியதுதானே ? ஏன் தயக்கம் ?இங்கு இந்த மாதிரி நிகழ்த்தி பார்த்து விடவும் ஏன் நினைத்து பார்த்திட கூடவும் கூட முடியவில்லையே ஏன்? 
ஒரு தயக்கம் வருகிறதல்லவா? தர்மசங்கடம் மனதின் ஓரத்தில் எட்டிப் பார்த்து திடுக்கிட வைக்கிறதல்லவா? 
எது உங்களை இங்கு தர்மசங்கடமாக உணர வைத்ததோ அதே தர்ம சங்கடமான மனநலையில் தான் இதனை எழுதிக் கொண்டிருக்கிறேன்! 
இதை பார்த்து எதுவும் திருந்திடப் போவதில்லை என்பதை அப்பட்டமாக உணர்ந்துதான் எழுதினேன்! 
மூளைக்கு உறைத்த ஒன்று ஏனோ மனதினால் உணரப்படுவதில்லை ! 
உனக்கேன் அக்கறை என்பதை எனக்காவது இருக்கிறதே என்று சில நேரங்களில் என் மனம் மரத்துப் போய் விடக் கூடாதென்பதற்காக எதையாவது உளறுவோம் கிறுக்குவோம்! 
நானும் சில வேளைகளில் மனம் மரத்து மரக்கட்டையாக உணர்ந்துவிடக் கூடாதென்பதற்காகவாவது எழுதிவிட்டேன்!
இது முழுக்க முழுக்க என் பார்வையில்
மட்டுமே!